சிங்காரவேலர் நகரில் குடிசைகளை அகற்றி தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்: பேரவையில் எபினேசர் வலியுறுத்தல்

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்டச் செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆகிய துறைகளின் மானியக் ேகாரிகை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ஆர்.கே.நகர் தொகுதி உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் (திமுக) பேசியதாவது: எனது தொகுதியான சுண்ணாம்பு கால்வாய் பகுதியில், கடந்த ஆட்சியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கரில் பசுமை பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கினார்கள். இன்றைய தினம் அந்த பூங்கா அங்கே இருக்கிறதா என்று கேட்டால், ஒரு சமூக ஆர்வலர் ஒருவர், ‘வடிவேல் படத்தில் வருகிற மாதிரி அந்த பூங்காவை அங்கே காணவில்லை’ என்று காவல் துறையிலே புகார் கொடுக்கின்ற அளவிற்கு தான் கடந்த கால நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றன. (அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்).

ஆரம்பக் கல்வி பாடத் திட்டத்தில், வண்ண படங்களுடன் கூடிய பாடத் திட்டங்களுக்காக, பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வுகளை கொண்டு வர வேண்டுகிறேன். எனது தொகுதிக்குட்பட்ட 43வது வார்டில் சிங்காரவேலர் நகர் என்ற ஒரு பகுதியிருக்கிறது. அது கடற்கரை ஒட்டியுள்ள பகுதியாகும். முற்றிலுமாக மீனவர்கள் வாழ்கின்ற பகுதி. அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் குடிசை வீடுகள். சுமார் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்கு அடிக்கடி பெரும் விபத்துகள் ஏற்படுகின்ற காரணத்தினால் அங்குள்ள வீடுகளை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக தொகுப்பு வீடுகளாக கட்டித் தர கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post சிங்காரவேலர் நகரில் குடிசைகளை அகற்றி தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்: பேரவையில் எபினேசர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: