விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் எல்-110 விகாஷ் இன்ஜின் சோதனை வெற்றி: நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோவில் வெற்றிகரமாக நடந்தது

பணகுடி: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் ராக்கெட் திட்ட எல்-110 விகாஷ் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் ராக்கெட் திட்டத்தின் எல்110 விகாஷ் இஞ்சின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி உள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி கடந்த 2007ல் ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டில் இத்திட்டத்துக்கு ககன்யான் என்று பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ககன்யான் திட்டத்துக்கு இஸ்ரோவின் அதிநவீன எல்விஎம்-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான விண்கலம், விண்வெளி உடை, விண்வெளி பயணத்துக்குப் பிறகு பூமி திரும்பும் வீரர்கள் பத்திரமாக தரையிறங்குவதற்கான பாராசூட் ஆகியவை நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. வரும் 2024ம் ஆண்டு மத்தியில் ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது.

இந்த விண்கலத்தில் அனுப்புவதற்காக ‘வியோமா மித்ரா’ என்ற பெண் ரோபோவை இஸ்ரோ தயார் செய்திருக்கிறது. இந்த ரோபோ விண்வெளியில் ஆய்வு செய்து இஸ்ரோவுக்கு தகவல் அனுப்பும். இதற்கான ககன்யான் ராக்கெட் திட்டத்தின் எல்-110 விகாஷ் இன்ஜின் சோதனை, நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் முன்னிலையில் இஸ்ரோ வளாக இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ், இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 240 விநாடிகள் நடைபெற்ற இச்சோதனை ஓட்டம், திட்டமிட்டபடி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

The post விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் எல்-110 விகாஷ் இன்ஜின் சோதனை வெற்றி: நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோவில் வெற்றிகரமாக நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: