தனியார் சார்பில் தினசரி ஆயிரக்கணக்கில் வசூல்ராமன்புதூர் சந்தை தெருவில் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்மேயர் மகேஷ் அதிரடி நடவடிக்கை

நாகர்கோவில், ஏப்.7: நாகர்கோவில் ராமன்புதூரில் தனியார் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையின் வெளியே தெருவிலும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் தினசரி ₹20 முதல் ₹500 வரை தனியாரால் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த கடைகளில் உள்ள கழிவுகள் கழிவுநீரோடை மற்றும் தெருக்களில் கொட்டப்படுவதால், அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே புகார்கள் எழுந்த நிலையில், கடந்த மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் சந்தியா இதுகுறித்து புகார் எழுப்பினார். அப்போது மேயர் மகேஷ் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை ராமன்புதூர் சந்தை அமைந்துள்ள தெருவில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அவருடன், மாநகர் நல அலுவலர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஸ், ராஜா, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர் தினகரன், திமுக மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் ஷேக் மீரான், மாநகர துணை செயலாளர் வேல்முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் சென்றனர். ஆய்வின் போது, சிறு வியாபாரிகளிடம் பணம் வசூலை உறுதி செய்த மேயர் மகேஷ், சந்தை நிர்வாகிகளை அழைத்து உங்கள் பட்டா இடத்திற்குள் வாடகை வசூல் செய்யலாம். ஆனால், தெருவில் வசூலிப்பது தவறு. மேலும், தெருவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை மாற்றி, அப்பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து, மாநகராட்சி 1வது வார்டான தோப்புவிளை தெருவில் ₹58.75 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியையும், வாத்தியார்விளையில் ₹57.5 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜா, மேரி ஜெனட் விஜிலா, சேகர், ஜெயசிங், திமுக மாவட்ட பொருளாளர் கேட்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

200 ஆழ்துளை கிணறுகள் பழுது பார்க்க தனிக்குழு

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் மேயர் மகேஷ் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சியில் தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணையில் 9 அடி தண்ணீர் உள்ளது. எனவே வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு வரலாம். சில நாட்களில் மழை பெய்து குடிநீர் தட்டுப்பாடை தீர்க்க இயற்கை கை கொடுக்கும் என நம்புகிறோம். தற்போது நாகர்கோவில் மாநகராட்சியில் 800 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் 200 ஆழ்துளை கிணறுகள் கண்டம் என்றனர்.

தற்போது புதிய ஆழ்துளை கிணறுகள்அமைக்க முடியாது என்பதால், வடசேரி கிராம நிர்வாக அலுவலகம் அருகே பிள்ளையார்கோயில் தெருவில் கண்டம் எனக்கூறப்பட்ட ஆழ்துளை கிணற்றை எனது முன்னிலையில் நீர்முழ்கி மோட்டாரை வெளியே எடுத்து பிளஷ் (தூர்வாருதல்) செய்ய கூறினேன். அடுத்த அரை மணி நேரத்தில் தண்ணீர் வந்தது. எனவே 200 பழுதான ஆழ்துளை கிணறுகளையும் தூர்வாரி சரி செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் இவர்கள் விரைந்து அனைத்துஆழ்துளை கிணறுகளை சரிசெய்து விடுவார்கள். பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுதவிர பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் கேட்டு கலெக்டருக்கு மனு தருவது குறித்து நானும் ஆணையரும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தனியார் சார்பில் தினசரி ஆயிரக்கணக்கில் வசூல்

ராமன்புதூர் சந்தை தெருவில் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்

மேயர் மகேஷ் அதிரடி நடவடிக்கை
appeared first on Dinakaran.

Related Stories: