பொதுப்பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து ஓட்டப்பிடாரத்தில் பெண்கள் காத்திருப்பு போராட்டம்

ஓட்டப்பிடாரம், மார்ச் 25: புதியம்புத்தூர் அருகே அடைக்கப்பட்டுள்ள பொதுப்பாதையை திறக்க வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதியம்புத்தூர் மேலமடம் பகுதியை அடுத்துள்ள பகுதியில் 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் 2 பொதுப்பாதைகளை மக்கள் செல்லாதபடி சிலர் அடைத்து வைத்துள்ளனர். இதனால் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகிய சம்பந்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 25 பேர்கள் புதியம்புத்தூர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த பாதை குறித்த மனுவையும் வருவாய் ஆய்வாளர் வசந்தராஜிடம் வழங்கினார். இதனையடுத்து வட்டாட்சியர் (பொறுப்பு) துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நேரடியாக பேசினார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தை நேரடியாக வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். பின்னர் அடைக்கப்பட்டுள்ள பாதை நிலவியல் பாதை என்றும் அடைப்பை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட நபரே உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்ட அவர், சம்பந்தப்பட்ட நபர் மீது புதியம்புத்தூர் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனுவை கொடுக்வும் அறிவுரை வழங்கினார்.இதனையடுத்து மக்கள் பயன்படுத்திய பொது நிலவியல் பாதை அடைக்கப்பட்ட இடத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று சம்பந்தப்பட்டவரிடம் எடுத்துக்கூறி பொதுப்பாதை அடைப்பு அகற்றப்பட்டது. பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: