காஞ்சியில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், வார்டுகளிலும் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் மாதந்தோறும் மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் வார்டில் அடிப்படை கோரிக்கைகளை கேட்டு, தீர்மானம் நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது, உறுப்பினர்கள் இடையே ஒவ்வொரு தீர்மானமாக நிறைவேற்றி வந்தநிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், இல்லத்தரசிகளுக்கு செப்டம்பர் மாதம் முதல் ரூ.1000 வழங்க இருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மாநகராட்சியின் 11வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சண்முகநாதன் குறுக்கிட்டு பேசும்போது, திமுக ஆட்சியில் அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்பொழுது தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என கூறுவது நியாயமற்றது என்றார்.

இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று, கூச்சலிட்டதால் சற்று சலசலப்பு ஏற்பட்டது. இதனால், மாநகராட்சி கூட்டரங்கில் சற்று பரபரப்பு ஏற்படுத்தியது. இதில், துணை மேயர் குமரகுருநாதன் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: