மணமை ஊராட்சியில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அகற்றம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஊராட்சி நிர்வாகம் அகற்றியது. மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சிக்கு உட்பட்ட மலைமேடு பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, அம்பேத்கர் நகரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையில், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு,  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், குடிநீர் தொட்டியின் 4 பக்க தூண்களும் வலுவிழந்து இன்றோ அல்லது நாளையோ இடிந்து விழும் அபாய நிலையில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தது.

மேலும், சிவராஜபுரம், லிங்கமேடு மற்றும் கீழக்கழனி மக்கள் அப்பகுதியை கடந்து செல்பவர்கள் உயிர் பயத்துடன் சென்று வந்தனர். இந்நிலையில், ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியின் இணைப்பை துண்டித்து, கடந்த 7 மாதத்துக்கு முன்பு அருகில் உள்ள தெருவில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அப்புறப்படுத்தாமல், அப்படியே கிடந்தது.

எனவே, குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து மிகப் பெரிய ஆபத்து  ஏற்படுவதற்கு முன்பு, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மணமை ஊராட்சி நிர்வாகம்  தலையிட்டு பழைய குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே, இடிந்து விழும் நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

Related Stories: