குண்ணம் ஊராட்சியில் பராமரிப்பின்றி கழிவுநீர் குட்டையாக மாறிய பூவாத்தம்மன் கோயில் குளம் : சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: குண்ணம் ஊராட்சியில், பராமரிப்பின்றி கழிவுநீர் குட்டையாக மாறிய பூவாத்தம்மன் கோயில் குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில் ஸ்ரீபூவாத்தம்மன் கோயில் உள்ளது. இதனையொட்டி, சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. இந்த குளம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. பின்னர், குளத்தின் அருகில் உள்ள தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் நேரடியாக கலந்து கொஞ்சம் கொஞ்சமாக மாசடைந்து தற்போது கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளாது.

மேலும், குளத்தை சுற்றி முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. கடந்த, 20 ஆண்டுகளாக முறையாக பராமரிக்காததால் இந்த குளம் மாசடைந்துள்ளது என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘குண்ணம் பூவாத்தம்மன் கோயில் குளத்தை சுற்றியுள்ள, குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் நேரடியாக கலந்துள்ளதால், இக்குளம் கடந்த 20 ஆண்டுகளாக மாசடைந்து காணப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் குளத்து நீரை பயன்படுத்துவதை நிறுத்தினர்.

தற்போது, கால்நடைகளுக்கு கூட பயன்படுத்த முடியாதநிலையில், இந்த குளம் கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. இதனால், இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, குளத்தை தூர்வாரி, சுற்றுசுவர் அமைக்க, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: