மானாமதுரையில் மார்ச் 25ல் வேளாண் மரபியல் கண்காட்சி

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரியமிக்க பல்வேறு சிறப்பு மிக்க பண்புகளைக் கொண்ட பயிர் ரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன. பாரம்பரியம் மிக்க உள்ளூர் ரகங்கள் மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான விரும்பத்தக்க புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. தமிழ்நாடு அரசு இதனை கருத்தில் கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தனி நிதிநிலை அறிக்கையில் இதற்கான சிறப்புக் கண்காட்சி நடத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளூர் பயிர் ரகங்களை கண்டறிந்து பகுதிக்கேற்ற சிறந்த மேம்பாட்டு ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இது குறித்த கண்காட்சிகள் வருடத்திற்கு 3 முறை நடத்த அறவுறுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் மூன்றாவது மரபியல் பன்முகத்தன்மை கண்காட்சி வரும் 25ம் தேதி அன்று மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள தனியார் மஹாலில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்(அட்மா) கீழ் நடத்தப்பட உள்ளது. இக்கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரியம் மிக்க உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்துதல், வேளாண் பல்கலைக்கழக பயிர்களை காட்சிப்படுத்துதல், விவசாய விஞ்ஞானிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு திருவிழா, மரபியல் பன்முகத்தன்மை குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப உரை போன்ற பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன. எனவே அனைத்து விவசாயிகளும் தங்கள் பகுதிகளில் விளையும் சிறந்த பண்புகளைக் கொண்ட பாரம்பரியமிக்க உள்ளூர் ரகங்களை காட்சிப் பொருளாக வழங்கி கண்காட்சியில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: