கோரிப்பள்ளத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் பாளை அண்ணாநகர் பூங்காவை புதுப்பிக்க வேண்டும் மாநகராட்சி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

நெல்லை, மார்ச் 22: பாளை மண்டலம், 5வது வார்டு அண்ணாநகர் பூங்காவை புதுப்பித்து தர வேண்டும். தச்சநல்லூர் மண்டலம், கரையிருப்பு பகுதியில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என நெல்லை மாநகராட்சியில் நேற்று நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். நெல்லை மாநகராட்சி சார்பில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மேயர் பி.எம்.சரவணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.  துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற்பொறியாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். இதில் மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி ஆணையாளர்கள் ஜஹாங்கீர் பாட்ஷா, வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ, ராமசாமி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 கூட்டத்தில் பங்கேற்ற பாளை மண்டலம் 5வது வார்டை சேர்ந்த அண்ணாநகர் பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சீவலப்பேரி சாலை அண்ணாநகர் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவை தனிநபர்கள் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளனர். எனவே, இதுவிஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி பூங்காவை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள சிறுவர்கள், குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியாக பூங்காவை புதுப்பித்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 இதே போல் நெல்லை மாநகராட்சி 28வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 28வது வார்டு பாரதியார் தெருவில் உள்ள கட்டிடத்தின் மாடியில் கா.சு பிள்ளை நூலகம் செயல்பட்டு வருகிறது. அதன் கீழ்தளத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. முறையான பராமரிப்பின்றி இந்நூலகம் செயல்படும் கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்துள்ளதோடு எந்நேரத்திலும் கீழே விழும் அபாயம் நிலவுகிறது. மாடிப்படிகளும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே அவற்றை பராமரித்து தர வேண்டும். டவுன் வையாபுரி நகர் வாட்டர் டேங்க் அருகே உள்ள அம்மா உணவகத்தை சுற்றிலும் கழிவுநீர் ஓடைகள் தண்ணீர் செல்ல வழியில்லாமல் அடைத்து நிற்கிறது. எனவே, இதுவிஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

 இதனிடையே நெல்லை மாநகராட்சி 2வது வார்டு திமுக வட்ட செயலாளர் ஜடாமுனி, இளைஞர் அணி மகேஷ், சுந்தராபுரம் ஆர்.எஸ்.ஏ.நகர் நலச்சங்க நிர்வாகிகள் செல்லத்துரை, அந்தோனி, பண்டாரம், பரமசிவம், சுப்பிரமணியன் ஆகியோர் அளித்துள்ள மனு விவரம்: தச்சநல்லூர் மண்டலம், 2வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு கரையிருப்பு, சுந்தராபுரம், ஆர்.எஸ்.ஏ.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கரையிருப்பு தனியார் மில் அருகே பஸ்நிறுத்தம் அமைத்து தர வேண்டும். மேலும் அங்கிருந்து சுந்தராபுரம் செல்வதற்கான பாதையானது முட்செடிகள் வளர்ந்து கரடுமுரடாக காணப்படுகிறது. எனவே அச்செடிகளை அகற்றி பஸ்நிறுத்தத்தில் இருந்து பொதுமக்கள் சுந்தராபுரம் செல்ல பாதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 நெல்லை மாநகராட்சி 36வது வார்டு கவுன்சிலர் சின்னத்தாய் கிருஷ்ணன் தலைமையில் வார்டு மக்கள் அளித்த மனு: 36வது வார்டு ஹைகிரவுண்ட் ரயில் நகர் பகுதியில் அரியநாயகிபுரம் குடிநீர்த்தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் கல்வி நிறுவனங்களும், அரசு ஊழியர் குடியிருப்புகளும் அதிக அளவில் உள்ளன. அங்கு சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. முட்செடிகள் அடர்ந்து ரயில்நகர் செல்லும் பாதையும் மோசமாக உள்ளது. எனவே வரும் 25ம்தேதி அன்று நடக்கும் மாநகராட்சி கூட்டு துப்புரவு முகாமில் அங்குள்ள தெருக்களை சுத்தப்படுத்தி தருவதோடு, முட்செடிகளை அகற்றி தரவேண்டும். மேலும் கோரிப்பள்ளம், பெரியார் நகர், போர்ஸ்வியூ கார்டன் பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பாளை சரோஜினிநகர் நீர்தேக்க தொட்டியில் இருந்து முன்பு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இப்போது திடீரென இரவு நேரங்களில் மட்டுமே அப்பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் பிடிக்க முடியாமல் திண்டாடுகிறோம். எனவே ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலையில் குடிநீர் விநியோகம் செய்திட கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: