இராஜகிரி குளவாய்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி

விராலிமலை: இராஜகிரி குளவாய்பட்டியில் இன்று (21ம்தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து காலை எட்டு மணிக்கு போட்டி தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. விராலிமலை அருகேயுள்ள இராஜகிரி குளவாய்பட்டி மதியசுவாமி கூத்தாண்டம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி நிகழாண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

போட்டியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது இதில் காளைகள் அடைக்கும் இடம், வாடிவாசல், அரசு அலுவலர்கள் பார்வையாளர் மாடம், பத்திரிகையாளர்கள் மாடம், கலெக்ஷன் பாயிண்ட், கால்நடைதுறை பாயிண்ட், தற்காலிக மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறை படி அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட நூற்றுக்கணக்கான காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்படுகிறது. வீரத்துடன் வெளியேறும் காளைகளை தீரத்துடன் அடக்க வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். போட்டியை காண ஆயிரக்கணக்காணவர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், இராஜகிரி குளவாய்பட்டி கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: