மளிகை கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்களின் வாக்கி-டாக்கி திருட்டு

குன்றத்தூர்: போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர் செல்லும் சாலையில் மளிகை கடை நடத்தி வருபவர் பவுல் (55). இவரது, கடையில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், மதுரவாயல், விருகம்பாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்திருந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் முன்புறமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, இதனை நோட்டமிட்ட மர்ம நபர் நைசாக, மதுரவாயல் தீயணைப்பு வாகனத்தில் ஏறி, அங்கு ஆபத்து காலங்களில் தகவல் பரிமாறிக் கொள்வதற்காக பயன்படுத்தும் வாக்கி - டாக்கியை திருடிச் சென்றனர்.

இதனிடையே தீயை அணைக்கும் பணிகளை முடித்துவிட்டு, வீரர்கள் வந்து பார்த்தபோது தான், அவர்களது வாக்கி- டாக்கி திருடுபோனது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த தீயணைப்பு வீரர்கள் இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்,  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வாக்கி-டாக்கியை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், ஆபத்து காலங்களில் தங்களது உயிரை பணயம் வைத்து உதவும் தீயணைப்பு வீரர்களின் வாக்கி-டாக்கியை, மனசாட்சி இல்லாமல் திருடிச் சென்ற மர்ம நபர்களின் செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: