சாலை விபத்தில் வாலிபர் பரிதாப பலி: கண் தானம் செய்த பெற்றோர்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த தென்னேரி பால்வாடி தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் செல்வகுமார் (28). இவர், ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, கீழ் ஒட்டிவாக்கம் என்ன இடத்தில் வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து  இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட செல்வகுமார் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்தில் உயிரிழந்த செல்வகுமாரின் கண்கள் பார்வையின்றி தவிக்கும் மற்றொருவருக்கு பயன்படும் வகையில் கண்தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர்.  இதனையடுத்து, தனியார் கண் தான வங்கிக்கு தொடர்பு கொண்டு செல்வகுமாரின் கண்களை  தானம் செய்தனர். இந்த நிகழ்வு சோகத்திலும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது. இந்த கண் தானம்  அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் எடுத்து காட்டாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: