எழுத்தறிவு திட்டத்தில் படித்த 18,682 பேர் தேர்வு எழுதினர்

மதுரை, மார்ச் 20: படிக்க தெரியாதவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் எழுத்தறிவு திட்டத்தில் பாடம் நடத்தி, நேற்று 18,682 பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு எண்ணும் எழுத்தும் கற்றுக் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. இதற்காக ‘‘புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம்’’ அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கால அளவு 2022 ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரை செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் 15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்ற 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி படி மாவட்டத்தில், முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுக்கப்பட்டது. அவர்களுக்கு இத்திட்டத்தின்படி கல்வி கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 30 லட்சத்து 38 ஆயிரத்து 258 பேர் உள்ளனர். தற்போது சுமார் 39 லட்சம் மக்கள் தொகை வரை உள்ளது. 2011ம் ஆண்டு கணக்குப்படி, மாவட்டத்தில், 15 வயதிற்கு மேற்பட்டவர்களில், எழுத படிக்க தெரியாதவர்கள் எண்ணிக்கை சுமார் 4 லட்சம் பேர் என கணக்கிடப்பட்டது. அவர்களுக்கு வாழ்க்கைக்கு உதவும் வகையில், படிப்பறிவாக எண்ணும் எழுத்தும் கற்றுக்கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, மாவட்டத்தில் முதல் கட்டமாக இந்த ஆண்டு, 18 ஆயிரத்து 682 பேருக்கு எண்ணும் எழுத்து கல்வி கற்பிக்க பள்ளிக் கல்வித்துறை சார்பில், பாடம் கற்பிக்கப்பட்டது.

இதற்காக மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றிய பகுதியில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் 548 கற்றல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில், கற்பிக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தினர். இதுவரை நடந்த பாடம் அடிப்படையில் அவர்களுக்கு நேற்று தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஆண்கள் 1,279 பேரும், பெண்கள் 17,325 பேரும், 22 ஆண் மாற்றுத்திறனாளிகள், 55 பெண் மாற்றுத்திறனாளிகள். ஒரு மூன்றாம் பாலினத்தோர் என மொத்தம் 18,682 பேர் தேர்வு எழுதினர்.  தேர்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வி அலுவலர்கள் கண்காணித்தனர்.

Related Stories: