அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் அறிவுரை

தூத்துக்குடியில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி, மார்ச் 18: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளின் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். அப்போது அமைச்சர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணிகள் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், அயலகத்தமிழர் நலத்துறையின் மூலம் குவைத் நாட்டில் காலமான கலீல்ரஹ்மான் என்பவரின் குடும்பத்தினருக்கு ₹15 லட்சத்து 95 ஆயிரத்து 159 இழப்பீட்டு தொகை, சுகாதாரத்துறை மூலம் கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணை ஆகியவற்றை வழங்கினர்.

கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: ‘தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. குறிப்பாக, அரசின் திட்டங்களை விரைவுப்படுத்திடவும், அலுவலர்களை ஊக்கப்படுத்திடவும் இக்கூட்டம் நடைபெறுகிறது. வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும். அரசின் அனைத்து திட்டங்களையும் அலுவலர்கள் விரைந்து செயல்படுத்திட வேண்டும்’ என்றார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:‘தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சென்று என்னென்ன பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றுள்ளது என்பது குறித்து களஆய்வு செய்து வருகிறார். எனவே, தூத்துக்குடி மாவட்டத்திலும் அரசின் அனைத்து திட்டங்களையும் விரைவாக செயல்படுத்தி முழுமையாக முடிக்க அனைத்து துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், சார்ஆட்சியர் கவுரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: