காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மாநகராட்சி, தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு: திருவள்ளூரில் ₹1 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல்

காஞ்சிபுரம், மார்ச் 16: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் சமீபகாலமாக வீடுகட்ட வரைபட அனுமதி, சர்வே துறையில் அதிக அளவில் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில், ஆதார் பிரிவு, நிலஅளவைப் பிரிவு, கணக்கு பிரிவு, வரி செலுத்தக்கூடிய பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு ஒவ்வொரு பிரிவிலும், அங்கு இருக்கக்கூடிய பணத்தைப் பெற்று அவை கணக்கில் வருகிறதா, கணக்கில் வராத பணம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்திலும் 5க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அனைத்து பிரிவுகளிலும் சோதனை மேற்கொண்டு, அங்கும் கணக்கில் வராத பணம் ஏதேனும் உள்ளதா என சோதனை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் பெரு நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, மாநகராட்சி பகுதிகளில் புதிய வீடுகள் கட்டுவதற்கு, கட்டிட வரைபடம் அனுமதி வழங்கும் பிரிவில் அதிகாரிகள் அதிகளவில் லஞ்சம் பெறுவதாக எழுந்த தொடர் புகார் காரணமாக இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நிலஅளவை பிரிவில் போதிய அலுவலர்கள் இல்லாததால், ஆள்வைத்து வேலை பார்ப்பதாகவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கதான் தாங்கள் லஞ்சம் கேட்பதாகக் கூறும் தற்காலிக அலுவலர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தை அடுத்த அய்யங்கார்குளத்தில் வீடுகட்ட வரைபட அனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசின் திடீர் சோதனை காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள் மத்தியிலும் பெரும் கலக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை முழுமையாக முடிந்தபிறகுதான் முக்கிய ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல் கிடைக்கும்.

திருவள்ளூர்: திருவள்ளூர்,  ராஜாஜிபுரம், விவேகானந்தர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட  மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த  அலுவலகம் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும்  வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ₹2.10 லட்சம் அரசு மானியத்துடன் தாங்களாகவே  வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதன்படி இந்த அலுவலகத்தில் இது வரை 85 ஆயிரம் பேர்  விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில்  அரசின் விதிமுறைகளை மீறி வீடு கட்டாதவர்களுக்கு கட்டியது போல் கணக்கு  காட்டுவது. ₹3 லட்சத்திற்கும் அதிகமான ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு  குறைத்து வருமான கணக்கு காட்டுவது, வீடு, நிலம் என வசதி படைத்தவர்களுக்கும்  வீடு இல்லை, நிலம் இல்லை என விண்ணப்பத்தில் தெரிவித்து பயனாளிகள் தேர்வில்  பெருமளவில் முறைகேட்டில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு  தொடர்ந்து புகார்கள் வந்தன.

 இதனையடுத்து திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு  நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச  ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் தமிழரசி, சுமித்ரா மற்றும் மாவட்ட ஆய்வு குழு  அலுவலர் நாராயணன் உள்பட 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர  சோதனையில் ஈடுபட்டனர். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய சோதனை 10 மணியை  கடந்தும் தொடர்ந்து நடைபெற்றது. இந்த ஆய்வின் போது கணக்கில் வராத பணம் ₹1  லட்சம் கைப்பற்றப்பட்டதாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக லஞ்ச  ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இது சம்மந்தமாக துறை ரீதியிலான  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் திருவள்ளூர்  மாவட்டம், பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகம், ஊத்துக்கோட்டை சோதனை சாவடி  உள்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டள்ளது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக  திருவள்ளூர் துணை கலெக்டரும், டாஸ்மாக் மாவட்ட மேலாளருமான கலைமன்னன்  டாஸ்மாக் பார் உரிமத்தை புதுப்பிக்க ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச  ஒழிப்புத்துறையினரால் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட சம்பவம்  அரங்கேறியதும் குறிப்பிடத்தக்கது.

ஆவடி: வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  தமிழகம்  முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில்  லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஆவடியில், வட்டாட்சியர் அலுவலகம்  மற்றும் சார் - பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர்  சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஆவடி, அடுத்த சேக்காடு, அண்ணா நகரில்,  சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பணியாற்றும் உதவியாளர்கள், பொது  மக்களிடம்  லஞ்சம் கேட்பதாக எழுந்தது.

இந்த புகாரில் பேரில், ஆலந்தூர்  லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 5 அதிகாரிகள் மாலை 3  மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை  செய்தனர். இதில் கணக்கில் வராத, ₹ 2,06,800 ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல், பட்டாபிராம், மாடர்ன்  சிட்டியில், உள்ள ஆவடி வட்டாச்சியர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை   டி.ஸ்.பி ஜாய் தயாள் தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் மதியம் 3 முதல் 5  நேரத்திற்கு மேலாக  மணி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது,  பொதுமக்கள் பாதிக்காத வகையில் தினசரி அலுவல்கள் நடை பெற்றது.

Related Stories: