வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செங்கை, காஞ்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: ‘கோவிந்தா’ கோஷமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செங்கல்பட்டு,டிச. 31: செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோயில் – அனுமந்தபுரம் சாலையில் 1,500 ஆண்டு பழமையான ஸ்ரீபாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் வைகுண்ட வாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4.15 மணிக்கு வைகுண்ட வாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூலவர் பூ அங்கி சேவையில் எழுந்தருளினார். தேவி, பூதேவி சமேத உற்சவர் பிரகலாதவரதர் ரத்னங்கி சேவையில் வைகுண்ட வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், செங்கல்பட்டு வேதாந்த தேசிகர் சீனிவாச பெருமாள் கோயில், பழைய சீவரம் லஷ்மி நாராயண பெருமாள், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம் உள்ளிட்ட பல்லாவரம் என செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

 காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. பெருமாள் ரத்னாங்கி சேவையில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில்களில் திருப்பணிகள் நடைபெறுவதால் பூஜைகள் எளிமையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் அழகிய சிங்க பெருமாள் கோயில், பச்ச வண்ண பெருமாள், பவளவண்ண பெருமாள், நிலா தூண்ட பெருமாள் கோயில், ஆதிகேச பெருமாள், திருநீரகத்தான் பெருமாள் கோயில், யதோத்தக்காரி பெருமாள் கோயில் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 108 பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, `கோவிந்தா… கோவிந்தா…’ என்று கோஷமிட்டு, பெருமாளை வணங்கி சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர்  அனந்தவல்லி சமேத சுந்தரவரதராஜ பெருமாள், திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில், பெரும்புதூரில் உள்ள ஆதிகேச பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் அதிகாலை முதலே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்களுக்கு புளியோதரை, இனிப்பு பொங்கல் அன்னதானங்கள், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

*மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5.15 மணிக்கு நடந்தது. முன்னதாக, சொர்க்கவாசல் கதவுகள், கோயில் மண்டபம், மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து கோயில் மண்டபத்தில் முத்தங்கி அலங்காரத்தில் தலசயன பெருமாள் ஸ்ரீதேவி – பூதேவியுடன் அருள்பாலித்தார். இதில், அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோவிந்தா… கோவிந்தா… கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, பெருமாள் தேவி – பூதேவியுடன் வீதியுலா வந்தார். நிகழ்ச்சியில், கோயில் (பொ) செயல் அலுவலர் செல்வகுமார், உபயதாரர் சரளாகுமார், மேலாளர் சந்தானம், பட்டாச்சாரியார்கள், கிராமத்தார் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடந்தது. முன்னதாக, நள்ளிரவு 12 மணியளவில் இருந்து அதிகாலை 2 மணி வரை பிரகார மண்டபங்களுக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டு, அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, ரங்கநாதர்  தேவி – பூதேவியுடன் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், செயல் அலுவலர் விஜயன், மேலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 5 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு, வேத விற்பன்னர்களால் திருப்பாவை கோஷ்டி பாராயணம் மேற்கொள்ளப்பட்டது. காலை 9 மணிக்கு உற்சவர் சுந்தர வரதராஜப் பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, பெருமாளை வழிபட்டனர். உற்சவ ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் வெங்கட கிருஷ்ணன், அறங்காவலர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர். இதில் உற்சவத்தில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கோதண்டராமன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த கோதண்டராமர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி விழா மிக விமரிசையாக நேற்று காலை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி அதிகாலை கருணாகர பெருமாளுக்கு மலர்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கருட வாகனத்தில் கருணாகர பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்தபோது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷமிட்டு பெருமாளை வணங்கினர். மேலும் நான்கு மாட வீதிகளில் கருணாகர பெருமாள் வலம் வந்தார்.

Related Stories: