காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்: 21ம் தேதி தேரோட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 16: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக வரும் 21ம் தேதி தோராட்டம் நடக்க இருக்கிறது.

காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யதோக்தகாரி பெருமாள் கோயிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கடந்த 13ம் தேதி தொடங்கி செல்வர் உற்சவம், அங்குரார்ப்பணம், சேனை முதன்மையார் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து, பங்குனி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நிலையில், யதோக்தகாரி பெருமாள் நேற்று காலை 5 மணிக்கு சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனைதொடர்ந்து, காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தையொட்டி, காலை மற்றும் மாலை வேளைகளில் சிம்ம வாகனம், ஹம்ஸ வாகனம், சூர்ய பிரபை, ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை, யாளி வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலிப்பார். விழாவின், முக்கிய நிகழ்வாக மார்ச் 17ம் தேதி காலை கருடசேவை, 21ம் தேதி தேர் உற்சவமும் விமரிசையாக நடைபெறும். மேலும், 23ம்தேதி தீர்த்தவாரியும், 24ம் தேதி மாலை வெட்டிவேர் சப்பரம் உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெற்று கொடியிறக்கம் நடைபெறும். இதற்கான விழா ஏற்பாடுகளை நல்லப்பா பாஷ்யகாரர் வம்சத்தார் பரம்பரை தர்மகர்த்தாக்கள், பரம்பரை நிர்வாக தர்மகர்த்தா நல்லப்பா நாராயணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories: