தேவனூர் கிராமத்தில் தரமற்ற முறையில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டப்படுவதாக பொதுமக்கள் புகார்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செய்யூர், செப். 29: தேவனூர் கிராமத்தில் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் பணியினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்தி தரமான முறையில் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுராந்தகம் ஒன்றியம் விராலூர் ஊராட்சியில் தேவனூர் கிராமம் உள்ளது. இங்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு கடந்த பல ஆண்டுகளாக சுற்றுச்சுவர் இல்லை. இதனால், பள்ளி வளாகத்தில் அவ்வப்போது விஷ ஜந்துக்கள் உலா வந்தன. எனவே, பள்ளி மாணவர்கள் பாதுகாப்புக்காக பள்ளியை சுற்றி சுற்று சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி, இப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. ஆனால், அமைக்கப்படும் சுற்றுச்சுவரானது ஹாலோ பிளாக் கற்களால் கட்டப்படுவதுடன் அதற்கு பூச்சுக் கலவையும் தரமில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சுவரானது செங்கற்களால் கட்ட வேண்டும். ஆனால், இந்த பள்ளியில் மட்டும் விதிகளை மீறி ஹாலோ பிளாக் கற்களால் சுற்றுச்சூழல் அமைக்கும் பணி நடந்து வருவது. இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தரமற்ற முறையில் கட்டப்படும் இந்த சுற்றுச்சுவரால் மாணவர்களுக்கு பெரும் ஆபத்து நேரிடும் என கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் சுற்றுச்சுவரின் தரத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: