திருவண்ணாமலை மாவட்டத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களின் எல்லைகள் மறு சீரமைப்பு பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது

திருவண்ணாமலை, செப்.29: திருவண்ணாமலை மாவட்டத்தில், சார்பதிவாளர் அலுவலகங்களின் எல்லைகளை மறு சீரமைப்பு செய்வது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. தாலுகா தலைமையிடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைமையிடம் அடிப்படையில், சார்பதிவாளர் அலுவலக நிர்வாக எல்லைக்கு உட்பட்ட கிராமங்களை மறுசீரமைப்பு பணி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இப்பணியை மேற்கொள்ள, பதிவுத்துறை தலைவருக்கு நிர்வாக அனுமதியை அரசு வழங்கியிருக்கிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள 23 சார்பதிவாளர் அலுவலகங்களை, தாலுகா தலைமையிடம் அடிப்படையில், அவற்றுடன் இணைக்க வேண்டிய கிராமங்கள் மற்றும் சாரபதிவாளர் அலுவலகங்கள் நிர்வாக எல்லைக்குட்பட்ட பதிவு கிராம எல்லைகளை மறு சீரமைத்து மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதையொட்டி, மறுசீரமைப்பு செய்யப்படும் கிராமங்களின் விவரங்கள், வேலூரில் உள்ள துணைப் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம், திருவண்ணாமலை டிஆர்ஓ மறறும் ஆர்டிஓ அலுவலகங்கள், சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலக விளம்பர பலகைகளில் ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கான எல்லைகளை மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, துணை பதிவுத்துறை தலைவர் (வேலூர்) சுதாமால்யா தலைமை தாங்கினார். திருவண்ணாமலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரன், மாவட்ட பதிவாளர் (திருவண்ணாமலை) வெங்கடேசன், அறிவழகன்(செய்யாறு) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பத்திரப் பதிவின் தொடர்ச்சியாக, பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பணிகள் பிழையின்றியும், தடையின்றியும் நடைபெற வசதியாக, சம்மந்தப்பட்ட தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களை, அதன் எல்லைக்குள்ள உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் இணைத்து மறு சீரமைப்பு செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கினர். அப்போது, பெரியபாலியப்பட்டு, கோளாப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் தற்போது திருவண்ணாமலை பத்திர பதிவு அலுவலகத்தில் இருந்து செங்கம் பதிவு அலுவலகத்துக்கு மாற்றினால், நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, வழக்கம் போல திருவண்ணாமலையில் தொடர அனுமதிக்க வேண்டும் அல்லது இடைப்பட்ட இடமான காஞ்சியில் பத்திர பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்களும், செய்யாறுக்கு மாற்றம் செய்வதை தவிர்த்து, மீண்டும் ஆரணி பத்திர பதிவு அலுவலகத்தில் தொடர அனுமதிக்க வேண்டும் என்றனர். பொதுமக்கள் தெரிவித்த ஆலோசனைகள், ஆட்சேபனைகள் அனைத்தும் அறிக்கையாக தயாரித்து, அரசுக்கு அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: