மாவட்டங்களுக்கு தவணை முறையில் அனுப்புகின்றனர் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியாகியும் சான்றிதழ் தாமதம்

நெல்லை, செப்.29:  தமிழகத்தில் தொழில்நுட்பத்துறை சார்பில் தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வு எழுத மாணவர்கள் தனியாக தட்டச்சு கல்வி நிலையங்களில் பயிற்சி பெறுகின்றனர். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் இளநிலை, முதுநிலை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பரவல் காலத்தில் இத்தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா கட்டுக்குள் வந்ததால் கடந்த மார்ச் மாதம் தட்டச்சு தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர். அடுத்த கட்ட தேர்வு கடந்த சனிக்கிழமை முதல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக இத்தேர்வு தற்காலிகமாக தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் எப்போது தேர்வு நடைபெறும் என தெரியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வு முடிவுகள் வெளியான பின்னரும், இதுவரை அதற்கான சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் முழுமையாக கிடைக்கவில்ைல. தற்போது சில மாவட்டங்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் இன்னும் வந்து சேரவில்லை. சான்றிதழ் வந்த பின்னர்தான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும். சான்றிதழ் வருவதில் தாமதம் ஏற்படுவதால் பிற மாவட்டத்தினருக்கு கிடைக்கும் பதிவு மூப்பு தங்களுக்கு பாதிக்கப்படுமோ என தேர்ச்சி பெற்றவர்கள் கவலைப்படுகின்றனர். எனவே தட்டச்சு தேர்வுக்கான சான்றிதழ்களை உடனே சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தேர்வு முடிவுகள் வெளியான நாளையே பதிவு மூப்பு நாளாக வேலைவாய்ப்பகளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: