கங்கைகொண்டானில் மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு 4 ஆண்டு சிறை

நெல்லை, செப்.28: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாத்தாள்(40). கயத்தாரை சேர்ந்த வீரபுத்திரன் என்ற ராஜ் கூலி தொழிலாளி ஆகியோருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். ராஜ், பெருமாத்தாள் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். பெருமாத்தாள் பல பகுதிகளுக்கு சென்று கருப்பட்டி விற்பனை செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2016 மே 5ம்தேதி மாலை பெருமாத்தாள் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ராஜ், மனைவியை கருப்பட்டி விற்க செல்லக்கூடாது எனக்கூறி தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் அளித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வீரபுத்திரன் என்ற ராஜை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு நெல்லை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், குற்றவாளி ராஜூக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கவும் தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார்.

Related Stories: