திருவண்ணாமலை மாவட்டத்தில் 215 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் ஒரே நாளில் 6,768 பேருக்கு பரிசோதனை

திருவண்ணாமலை, செப்.22: திருவண்ணாமலை மாவட்டத்தில், காய்ச்சல் சிறப்பு முகாம் நேற்று 215 இடங்களில் நடந்தது. அதன்மூலம், பள்ளி மாணவர்கள் உள்பட 6768 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பரவி வருகிறது. பருவநிலை மாறுபாடு மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் ஒருவகையான வைரஸ் காய்ச்சல் என மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஓய்வு மூலம் காய்ச்சல் குணமடையும் என ஆலோசனை அளித்துள்ளது. இந்நிலையில், காய்ச்சல் பாதிப்புக்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருேவாரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அந்தந்த பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 128 இடங்கள், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 87 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று 53 மருத்துவக் குழுக்கள் மூலம் 215 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. டெங்கு அறிகுறி, காய்ச்சல் பாதிப்பு போன்றவை கண்டறியப்பட்ட பகுதிகளில், முன்னுரிமை அடிப்படையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மருத்துவக் குழுவில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் இடம்பெற்றிருந்தனர். நேற்று நடந்த முகாம்களில் 6,768 பேருக்கு உடல் வெப்பத்தை கண்டறியும் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும், காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டவர்களுக்கு, அதற்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்க ஆசிரியர்களுக்கு மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். மேலும், மாணவர்களுக்கு முறையான சிகிச்சை பெறவும் ஆலோசனை அளிக்கப்பட்டது. மேலும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஏற்கனவே உள்ள காய்ச்சல் சிறப்பு வார்டில் 40 படுக்கை வசதிகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்க சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: