வெள்ளக்கெவி மலை கிராமத்திற்கு மண் சாலை அமைக்கும் பணி தீவிரம்: தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு

கொடைக்கானல், ஜூன் 11: கொடைக்கானலில் இருந்து 14 கிமீ தொலைவில்  அமைந்துள்ளது வெள்ளகெவி மலைக்கிராமம். சுமார் 400 ஆண்டுகள் பழமையான இம்மலை  கிராமத்திற்கு இதுவரை சாலை வசதி இல்லை. இங்கு விளையும் விளை பொருட்களை  இப்பகுதி மக்கள் தலைச்சுமையாகவும், குதிரைகள் மூலமாகவும் கொடைக்கானல்,  பெரியகுளம் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்று பிழைப்பை நடத்தி  வருகின்றனர். இவ்வூரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர்.

சாலை வசதி இல்லாத காரணத்தினால் இவ்வூரை சேர்ந்த பலர்  இங்கிருந்து வெளியேறி வெளியூர்களில் செட்டில் ஆகி விட்டனர். பல ஆண்டுகளாக  இப்பகுதி மக்கள் சாலை வசதி கோரி பல்வேறு போராட்டங்கள் செய்து வந்த நிலையில்  பழநி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் முயற்சியினாலும், கொடைக்கானல்  ஆர்டிஓ முருகேசன் நடவடிக்கையினாலும் தற்போது இப்பகுதிக்கு செல்ல மண் சாலை  அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இப்பணி வனத்துறையின்  எதிர்ப்பை மீறியும், பல்வேறு தடைகளையும் தாண்டியும் நடந்து வருகிறது.  சுமார் 12 கிமீ அளவிற்கு பணி முடிவுற்ற நிலையில் இன்னும் ஓரிரு கிமீ பணி  முடிந்து விட்டால் இந்த மண் சாலை பணி முழுமையாக நிறைவு பெறும் என  அதிகாரிகள் தெரிவித்தனர்.     இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  ‘வெள்ளக்கெவி மக்களின் பல ஆண்டுகள் கனவை நிறைவேற்றி தந்த தமிழக அரசுக்கு  நன்றி தெரிவித்து கொள்கிறோம். சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் சாலை  வசதி இல்லாத  நிலையில் தற்போது மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது  மகிழ்ச்சியளிக்கிறது. எனினும் இந்த மண் சாலையில் வாகனங்கள் பயணிக்க  முடியாது. எனவே தமிழக அரசு தனி நிதி ஒதுக்கி வெள்ளக்கெவி கிராமத்திற்கு  தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: