கிழக்கு கடற்கரை சாலையில் கருவேல முட்கள் ஆக்கிரமிப்பு: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 16: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிழக்கு கடற்கரை சாலையின் இரு ஓரங்களிலும் பெரும்பாலான பகுதிகளில், கருவேல முட்புதர்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் இருந்து பல்வேறு கடலோர மாவட்டங்கள் வழியாக கடலோர பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக செல்வது சென்னை – பாண்டிசேரி, ராமநாதபுரம்-ராமேஸ்வரம், தூத்துக்குடி-கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், கார், வேன் மற்றும் டூரிஸ்ட் வாகனங்கள், கனரக வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த சாலையின் இருபுறங்களிலும் பாதசாரிகள் நடந்து செல்லக் கூடிய பகுதியாக வெள்ளைக்கோடு போடப்பட்டுள்ளது. இந்த வெள்ளை கோட்டிற்கு வெளி பகுதியில் தான் பாதசாரிகள் நடந்து செல்ல வேண்டும் என்பது சாலை போக்குவரத்து விதியாகும். ஆனால் தேவிபட்டிணம் முதல் எஸ்.பி.பட்டிணம் வரையிலும் இந்த சாலையில் பெரும்பாலான பகுதிகளில் பாதசாரிகள் நடந்து செல்லக் கூடிய வெள்ளைகோடு வரையிலும் காட்டு கருவேல முட்புதர்கள் வளர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதசாரிகள் வாகனங்கள் செல்லும் பகுதியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கூட தெரிவது இல்லை. இதனால் நடந்து செல்லக் கூடிய பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் விபத்திற்குள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி பஸ்,லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரும்போது டூவீலர் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் வாகனத்திற்கு வழிவிட்டு ஒரமாக ஒதுங்குவதற்கு முயன்றால் கால், கைகளில் கருவேல முட்கள் குத்தி பதம் பார்த்து விடுகின்றது. இதனால் டூவீலர் வாகன ஒட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சில இடங்களில் சாலையில் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதனால், விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படுகிறது. எனவே மேலும் விபத்துக்கள் ஏதும் ஏற்படும் முன்பாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்மந்தப்பட்ட துறையினர் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள காட்டு கருவேல முட்புதர்களை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கிழக்கு கடற்கரை சாலையில் கருவேல முட்கள் ஆக்கிரமிப்பு: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: