விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படும் வகையில் குரங்கணி பிச்சாங்கரை இடையே அணை கட்டப்படும்: தங்க தமிழ்செல்வன் எம்பி உறுதி

போடி, ஜூன் 16: தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தங்க தமிழ்செல்வன் எம்.பி போடி பகுதியில் திறந்த வேனில் ஊர்வலமாக வந்து நன்றி தெரிவித்தார். அவருக்கு தேனி வடக்கு மாவட்டம் போடி நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில், போடி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் முன்னிலையில் போஜன் பார்க் நுழைவாயிலில் பிரமாண்ட மாலையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தங்க தமிழ்செல்வன் எம்பி பேசுகையில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்துள்ளீர்கள். போடிநாயக்கனூர் தொகுதியில் மட்டுமே 8,600 வாக்குகள் அதிகம் பதிவு செய்திருப்பது மிகுந்த பெருமையாக இருக்கிறது.

குரங்கணி மலைப்பகுதியில் சுமார் ரூ.500 கோடி திட்ட மதிப்பில் குரங்கணி பிச்சாங்கரை இடையே பெரிய அளவிலான அணை கட்டப்பட்டு விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பஞ்சம் இல்லாத அளவில் நிறைவேற்றப்படும். இந்த அணையால் இந்தியாவிலேயே போடி போற்றப்படும் தொகுதியாக மாறும். மேலும் தேனி திண்டுக்கல் இடையே புதிய அகல ரயில்பாதை கொண்டு வரப்பட்டு தேனி மாவட்ட மக்களின் போக்குவர த்திற்கு எளிதாக மாற்றவும் அவர்கள் பாதுகாப்பாக சென்று வரவும் நிச்சயமாக நிறைவேற்றுவேன். தமிழ்நாடு பாண்டிச்சேரி உட்பட 40க்கு 40 தொகுதிகளை வென்றெடுப்பதற்கு முக்கிய காரணமே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீராத உழைப்பாலும், அவர் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றியும் வளர்ச்சி பணிகளின் பாதையில் பயணித்து பொதுமக்களுக்கு பயன்படும் திட்டங்களின் சாதனையே அந்த நிலையை உயர்த்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வின் போது, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், நிஷாந்த் தங்கதமிழ்செல்வன், முன்னாள் நகரச் செயலாளர் ரமேஷ் ராஜா, கவுன்சிலர் முருகேசன், நடேசன், நகர அவைத்தலைவர் சின்னத்துரை, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சன்னாசி, நகர்மன்ற உறுப்பினர்கள் திமுகவினர் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

The post விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படும் வகையில் குரங்கணி பிச்சாங்கரை இடையே அணை கட்டப்படும்: தங்க தமிழ்செல்வன் எம்பி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: