வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

வத்தலக்குண்டு, ஜூன் 16: தினகரன் செய்தி எதிரொலியால் வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கண்ட பள்ளியாகும். ஆங்கிலேயர்களால் ஆங்கிலஎழுத்து எச் வடிவில் கட்டப்பட்ட இந்த பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி வத்தலக்குண்டு சுப்ரமணிய சிவா, சாகித்திய அகடாமி விருது பெற்ற வத்தலக்குண்டு எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பா, பி.எஸ். ராமையா, தமிழின் 2வது நாவல் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய வத்தலக்குண்டு ராஜம் அய்யர், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் படித்துள்ளனர். இப்பள்ளி கடந்த 2023ம் ஆண்டு இருபாலர் பள்ளியாக மாற்றப்பட்டது. ஆனால் மாற்றப்பட்ட தகவல் மக்களை சென்று அடையாததால் கடந்த ஆண்டு இப்பள்ளியில் 260 மாணவர்களும், 2 மாணவிகளும் மட்டுமே படித்து வந்தனர்.

இதை தொடர்ந்து பள்ளியில் மாணவிகளுக்கென தனி கழிப்பறை, கண்காணிப்பு கேமிரா உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டது மேலும் பள்ளி ஆசிரியர்கள் தங்களிடையே நிதி திரட்டி சுவரொட்டி ஒட்டியும், துண்டு பிரசுரம் வழங்கியும் பிரசாரம் செய்தனர். இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. இதன் எதிரொலியாக இந்த ஆண்டு இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கூடியுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை 260ல் இருந்து 270 ஆகவும், மாணவியர்களின் எண்ணிக்கை 2ல் இருந்து 27 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தவறிய மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி பாஸாகி பள்ளியில் சேரும் போது மேலும் எண்ணிக்கை கூடும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

The post வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: