கோடை சாகுபடி செய்த பருத்தியில் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை

நன்னிலம், மே 28: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில், கோடை சாகுபடி ஆன, பருத்தி விவசாயம் மேற்கொண்ட விவசாயிகள், இந்த ஆண்டு, பருத்தியில் எதிர்பார்த்த வருமானம் வராமல், கவலை அடைந்து உள்ளனர். பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும், கடல் காற்றின் மேலடுக்கு மற்றும் கீழ் அடுக்கு சுழற்சியால் ஏற்பட்ட மாற்றத்தால், பருவமழை காலம் போல், தொடர்ச்சியாக 15 முதல் 20 நாட்களுக்கு மேலாக மழைப்பொழிவு ஏற்பட்டதால், பருத்திச் செடிகளின் வளர்ச்சி பாதிப்படைந்தது.

மழையால் பாதிப்படைந்த செடிகளை, விவசாயிகள் அவ்வப்போது, செடியின் வளர்ச்சிக்காக மருந்துகள் தெளித்த பொழுதும், பருத்தி செடிகள் போதுமான வளர்ச்சி பெறவில்லை. சில இடங்களில், செடிகள் ஒரு அடிக்கு மேலாக வளரவில்லை. சில இடங்களில் செடிகள் இரண்டு அடியில் இருந்து மூன்று அடி வரை வளர்ந்து உள்ளது. ஆனால் பருத்தி செடிகள், பூ பூத்து, காய் காய்த்து, வெடிக்கும், வருவாய்க்கான நிலைக்கு வரவில்லை. ஒரு சில இடங்களில் காய் காய்த்து இருந்தாலும், அவை போதுமான வளர்ச்சி பெறுமா, என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு பருத்தி விளைச்சல் அதிகமானதால், விலை வீழ்ச்சி அடைந்தது. அதனால் இந்த ஆண்டு குறைந்த அளவிலான விவசாயிகளே, பருத்தி விவசாயத்தை மேற்கொண்டனர். காற்று மழையால், பருத்தி விவசாயம், பாதிப்படைந்துள்ளது. பருத்தி விவசாயிகள் நிலத்தைப் பண்படுத்தி, பருத்தி விதை விதைத்ததில் இருந்து, தொடர்ச்சியாக, செலவு செய்து வருகின்றனர். செடியை பாதுகாத்தும் விவசாயிகளால், விளைச்சலை காணமுடியாமல், தவித்து வருகின்றனர்.

வழக்கம்போல் ஜூன் 12ல் திறக்கும் மேட்டூர் அணை, இந்த ஆண்டு மே மாதமே தண்ணீர் திறக்கப்பட்டதால், பருத்தி விவசாயம் மேற்கொள்ளாத விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். பருத்தி விவசாயிகள், ஒரு ஈடாவது பருத்தி எடுக்க முடியுமா, எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Related Stories: