வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ₹14 லட்சம் மோசடி

புதுச்சேரி, மே 14: வெளிநாட்டில் ேவலை வாங்கி தருவதாகக்கூறி புதுச்சேரியில் பலரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த நாகையை சேர்ந்த ஆசாமியை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி சாரதாம்பாள் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவர், பாக்கமுடையான்பேட்டை லாஸ்பேட்டை மெயின் ரோடு திருமண மண்டபம் அருகே ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவரிடம், லாஸ்பேட்டை குறிஞ்சிநகரில் வாடகை வீட்டில் வசிக்கும் முல்லைநாதன் (49) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக ஜெராக்ஸ் எடுத்து வந்துள்ளார். இதன் மூலம் அவருடன் குணசேகரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. தனக்கு தெரிந்த ஒருவர், சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்வதாகவும், அவர் தற்போது புதுச்சேரி வந்திருப்பதாகவும், அவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் குணசேகரனிடம் முல்லைநாதன் தெரிவித்துள்ளார். இதையடுத்து குணசேகரன், தனது ஜெராக்ஸ் கடையின் பக்கத்தில் ஸ்கூல் பேக் கடை வைத்திருக்கும் சாதிக் என்பவரிடம் கூறி, அவரது மகன் சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல ரூ.2.5 லட்சம் பணம் வாங்கி கொடுத்துள்ளார். கடந்த 2018ல் நடந்தது. 3 மாதத்தில் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறிய முல்லைநாதன், 5 மாதமாகியும் அதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் இருந்துள்ளார். இதுபற்றி முல்லைநாதனிடம் குணசேகரன் கேட்டதற்கு, குழுவாகத்தான் அனுப்ப முடியும், மேலும் ஆட்கள் இருந்தால் ஏற்பாடு செய்யுமாறும் கூறியுள்ளார். இதனால் தனக்கு தெரிந்த மேலும் 9 பேரிடம் குணசேகரன் பணம் வாங்கி அவரிடம் கொடுத்துள்ளார். மொத்தம் ரூ.14 லட்சம் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் இப்பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல ஏற்பாடுகளை செய்யவில்லை.

அதன்பிறகு முல்லைநாதன் தலைமறைவானார். அவரை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டபோது, கை உடைந்து விட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த குணசேகரன், முல்லைநாதனை பற்றி விசாரித்ததில் அவரது சொந்த ஊர் நாகை மாவட்டம் சீர்காழி அருகேவுள்ள திருமுல்லைவாசல் என்பதும், அங்கு அவர் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து திருமுல்லைவாசல் சென்று முல்லைநாதனிடம் குணசேகரன் பணத்தை கேட்டார். அப்போது பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். அதன்பிறகும் பணத்தை கொடுக்கவில்லை. இதற்கிடையே, பணத்தை கொடுத்தவர்கள் குணசேகரிடம் பணத்தை திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் அவர் வட்டிக்கு வாங்கி பணத்தை அவர்களுக்கு கொடுத்தார். இதனிடையே, முல்லைநாதனுக்கு ஏற்கனவே குணசேகரன் ரூ.8 லட்சம் கடனாக கொடுத்திருந்தார். அந்த பணத்தையும் கொடுக்காமல், அதற்காக காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அது வங்கியில் பணமின்றி திரும்ப வந்து விட்டது.

இது குறித்து குணசேகரன், புதுச்சேரி சிபிசிஐடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து முல்லைநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: