ஆரணி அருகே வேனில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி பலி

ஆரணி, மார்ச் 26: ஆரணி அருகே மினி வேனில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். ஆரணி அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(50), மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி மகாராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மேலும், இவர் ஆரணி டவுன் மில்லர் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூட்டை தூக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் சங்கர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மினி வேனில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது, மினி வேனை டிரைவர் இயக்கியுள்ளார்.

அதில் சங்கர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், தலையில் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து படுகாயமடைந்த சங்கரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்ததில், சங்கர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் நேற்று முன்தினம் சங்கரனின் மனைவி மகாராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: