(தி.மலை) டாக்டரின் பரிந்துரையின்றி மருந்துகளை விற்பனை செய்தால் கடைக்கு ‘சீல்’ எஸ்பி பவன்குமார் எச்சரிக்கை போதைக்காக மாத்திரைகளை பயன்படுத்துவதால் விபரீதம்

திருவண்ணாமலை, மார்ச் 25: திருவண்ணாமலை மாவட்டத்தில், போதைக்காக மாத்திரைகளை விற்பனை செய்வதால் பல விபரீதம் ஏற்படுவதால், டாக்டரின் பரிந்துரையின்றி மருந்துகளை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எஸ்பி பவன்குமார் எச்சரித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆரணியில் போதை தரும் மாத்திரைகளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்து விற்ற மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் எதிரொலியாக, திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஓட்டலில், மருந்து கடை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் எஸ்பி பவன்குமார் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஎஸ்பி அண்ணாதுரை, மருந்துகள் ஆய்வாளர் கோகிலா, மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், எஸ்பி பவன்குமார் பேசியதாவது: மன அழுத்தம், மனநிலை பாதிப்பு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கு டாக்டரின் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டிய மாத்திரைகளை, தவறான நோக்கத்தில், போதைக்காக சிலர் பயன்படுத்துகின்றனர். அதனால், விபரீதம் ஏற்படுகிறது. எனவே, டாக்டரின் பரிந்துரையின்றி இதுபோன்ற ஆபத்தான, பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, கூடுதலாக பயன்படுத்தும்போது போதை தரக்கூடிய மாத்திரைகளை விற்பனை செய்வதும், வாங்கி பயன்படுத்தும் சட்டப்படி குற்றமாகும். இருமலுக்கு பயன்படுத்தும் சிரப், அளவுக்கு அதிமாக பயன்படுத்தும்போது மயக்கம் மற்றும் போதை ஏற்படுத்தும். எனவே, அதையும் விற்பனை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். வாகன டயர்களுக்கு பஞ்சர் ஒட்ட பயன்படுத்தப்படும் சொலுயூஷன், பெவிகால் போன்றவற்றையும் தவறான நோக்கத்தில் போதைக்காக பயன்படுத்துகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். எனவே, இதுபோன்ற மாற்று போதை பொருட்களை பயன்படுத்தும் செயல்கள் நடைபெறுகின்றன. மேலும், மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி போதை ஏற்படுத்திக்கொள்ளும் சிறுவர்கள், இளைஞர்களின் வாழ்க்கை திசைமாறி போகிறது. திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபடுவதற்கு இந்த போதைப் பழக்கம் காரணமாக அமைகிறது. எனவே, போதை தரும் மாத்திரைகள், சிரப் போன்றவற்றை வாங்குவதற்காக வரும் நபர்களை அடையாளம் கண்டு, வாட்ஸ் அப் மூலம் எனக்கு தகவல் அளித்தால், அவர்களை மீட்டு ஆரம்ப நிலையிலேயே மறுவாழ்வு அளிக்க உதவியாக இருக்கும். எனவே, சட்ட விரோதமாக தவறான நோக்கத்துடன் டாக்டரின் பரிந்துரையின்றி மருத்து, மாத்திரைகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும். அதனால், இதுபோன்ற நடவடிக்கைகளை மருந்து கடை உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: