சாயல்குடி, மார்ச்.19: முதுகுளத்தூர் அருகே மேலக்கொடுமலூர் குமரன் கோயில் பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. முதுகுளத்தூர் அருகே உள்ள மேலக்கொடுமலூர் குமரன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் அரோகர கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். குமரனுக்கு நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பால், நெய், இளநீர் உள்ளிட்ட நீர்வகை பொருட்கள், பழங்கள், தானியங்கள் என பலவகை அபிஷேகங்கள், பூஜைகள், தீபாரதனைகள் நடந்தது. ஆயிரம் வருடம் பழமையான உடை மரத்தில் கவட்டை வடிவிலான கம்புகளை நேர்த்தி கடனாக செலுத்தியும், திருமணம் தடை உள்ளவர்கள் மணிகள் கட்டியும், குழந்தைபேறு இல்லாதவர்கள் தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
