செங்கல்பட்டு: கடந்த ஒரு ஆண்டுக்கு முன், அண்ணனை கொலை செய்த கும்பலை, பழிக்குப்பழியாக தீர்த்துக் கட்ட திட்டமிட்டு, சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய 6 பேரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள், 3 பைக் பறிமுதல் செய்யப்பட்டன. செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் மல்ரோசாபுரம் பகுதியில் சந்தேகப்படும்படி 6 பேர் கொண்ட கும்பல் சுற்றித்திரிவதாக மறைமலைநகர் போலீசாருக்கு ரசசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துசாமி, எஸ்ஐ வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேற்று சென்று, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மல்ரோசாபுரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்வதாக கூறி 6 பேர், அதே பகுதியில் கடந்த 10 நாட்களாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அந்த வீட்டுக்கு சென்ற போலீசார், 6 பேரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். செம்மஞ்சேரி சுனாமி குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்த சேட்டு (எ) பாலாஜி, அவரது தம்பி ஹரிசங்கர் (எ) கடுகு, காரப்பாக்கம் ஷியாம்குமார், சோஷிங்கநல்லூர் அபிமன்யு, காரப்பாக்கம் இந்திரா நகர் தினேஷ், செங்கல்பட்டு புலிப்பாக்கம் அருண்குமார் ஆகியோர் என தெரிந்தது.
மேலும் விசாரணையில், சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த சேட்டு (எ) பாலாஜியின் அண்ணன் கருப்பு (எ) வடிவழகன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன், அப்பகுதியில் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கும்பலை பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில், சேட்டு (எ) பாலாஜி, தனது கூட்டாளிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். இந்த கொலை செய்வதற்காக, பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடி பழுதுபார்த்து அவற்றை பயன்படுத்தியுள்ளனர் என தெரியவந்தது. இதையடுத்து, இவர்களிடம் இருந்து 2 பட்டாக்கத்திகள், 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 6 பேரையும் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் நேற்று அடைத்தனர்.