திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு உதவி கலெக்டர் வழங்கினார்

திருவண்ணாமலை, ஜன.26: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், 12வது தேசிய வாக்காளர் தின விழா நேற்று நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உதவி கலெக்டர் பரிசு வழங்கினார்.

வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, 12வது தேசிய வாக்காளர் தின விழா நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டாரவி தேஜா தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், ஆர்டிஓ வெற்றிவேல், தேர்தல் பிரிவு தாசில்தார் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் அலுவலக ேமலாளர் (குற்றவியல்) பாலமுருகன் தொகுத்து வழங்கினார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு வண்ண கோலம் வரையப்பட்டிருந்தது. மேலும், விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதோடு, வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும், முதல் வாக்காளர்கள், திருநங்கை வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, விழிப்புணர்வு வாசகம் மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டாரவி தேஜா பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கினார். மேலும், தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்ய அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: