(தி.மலை) முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள் போலீஸ் கண்காணிப்பு தீவிரம் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஜன.24: திருவண்ணாமலை மாவட்டத்தில், முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது. இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை எப்போதும் இல்லாத அளவில் நாளொன்றுக்கு சுமார் 600 பேர் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழகம் முழவதும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு விதித்திருக்கிறது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய பணிகள் தவிர்த்து மற்ற அனைத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து 3வது வாரமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், முழு ஊரடங்கு தினமான நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட்டமும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், வாகன போக்குவரத்தும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. திருவண்ணாமலை நகரில் எப்போதும் மக்கள் கூட்டத்தால் நெரிசலுடன் காணப்படும் தேரடி வீதி, மாட வீதி, சன்னதி தெரு, பஸ் நிலையம் ரவுண்டானா பகுதி போன்றவை வெறிச்சோடியும், நிசப்தமாகவும் காணப்பட்டடன. அதேபோல், ஆரணி, செய்யாறு, வந்தவாசி நகராட்சிகள் மற்றும் செங்கம், போளூர், சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர் போன்ற பேரூராட்சி பகுதிளிலும் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடின. மாவட்டம் முழுவதும் மருந்து கடைகள், பால் விற்பனையகம் போன்ற அத்தியாவசிய பணிகள் மட்டும் வழக்கம் போல அனுமதிக்கப்பட்டன.

ஒருநாள் முழு ஊரடங்கை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. தடுப்பு வேலிகள் அமைத்து சோதனை நடத்தினர். அத்தியாவசிய காரணமின்றி வெளியில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனர். மேலும், நேற்று முகூர்த்த தினம் என்பதால், திருமணத்துக்கு சென்று வந்தவர்களை உரிய விசாரணைக்கு பிறகு அனுமதித்தனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு, முகக்கவசம் அளித்து, எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Related Stories: