திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல்வரத்து அதிகரிப்பு கூடுதல் விலை கிடைப்பதால் வரவேற்பு

திருவண்ணாமலை, ஜன.22: திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று வரை 500 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஆண்டு இறுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏரிகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. எனவே, மாவட்டம் முழுவதும் சம்பா பருவத்தில் நெல் விளைச்சல் வெகுவாக அதிகரித்திருக்கிறது. பாரம்பரியமாக சாகுபடி செய்யப்படும் நாட்டு பொன்னி மட்டுமின்றி, குறுகிய கால நெல் ரகங்களான டீலக்ஸ் பொன்னி, கோ 51, ஆர்என்ஆர், ஏடிடி 37, எல்எல்ஆர் போன்ற நெல் ரகங்கள் பரவலாக பயிரிடப்பட்டுள்ளன. மார்கழி இறுதியில் அறுவடை தொடங்கியது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு தற்போது மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை தீவிரமடைந்திருக்கிறது. எனவே, மாவட்டம் முழுவதும் மார்க்கெட் கமிட்டி, வெளி மார்க்கெட் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

'இந்நிலையில், வெளி மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள நெல் விலை வீழ்ச்சியை தடுக்க, மாவட்டம் முழுவதும் 54 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 11ம் தேதி முதல் செயல்படுகின்றன. சன்ன ரக நெல் குவிண்டால் ₹1,958க்கும், சாதாரண ரக நெல் குவிண்டால் ₹1,918க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட் விலையைவிட, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிலோவுக்கு அதிகபட்சம் ₹5 வரை கூடுதலாக கிடைக்கிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், கடந்த 6ம் தேதி முதல் www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். பட்டா, சிட்டா மற்றும் அடங்கல், ஆதார் எண், சர்வே எண், வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 11ம் தேதி முதல் கொள்முதல் தொடங்கிய நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்கள் தவிர்த்து இதுவரை மாவட்டம் முழுவதும் சுமார் 600 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அறுவடை தீவிரமாகியிருப்பதால், இனி வரும் நாட்களில் நெல் வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்படும். எனவே, விவசாயிகளின் தேவை அறிந்து, கூடுதலான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Related Stories: