நகர்புற உள்ளாட்சி தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளாட்சி அலுவலர்களிடம் ஒப்படைப்பு

நாகர்கோவில், ஜன.9 :  நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக காரவிளை சமுதாய நலக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியினை கலெக்டர் அரவிந்த் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரவிளை சமுதாய நலக்கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டது.

முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து நகர்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு பயன்படுத்த தயாராக உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறிப்பிட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யும் முதல் கட்ட பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, காரவிளை சமுதாய நலக்கூடத்தில் 1200 வாக்குசாவடி மையங்களுக்கு 20 சதவீதம் அதிகமாக மொத்தம் 1503 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் காரவிளை செல்வன் (திமுக) மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: