நாகர்கோவிலில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு 4 நாட்கள் நடக்கிறது

நாகர்கோவில், டிச.16: அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்றிய அரசால் நடத்தப்படுகின்ற கேந்திரிய வித்யாலயா பள்ளி உட்பட சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதாகும். அந்த வகையில் இத்தேர்வு ஆண்டுதோறும் பிப்ரவரி, ஜூலை மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். சிபிஎஸ்இ இந்த தேர்வை நடத்துகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேர்வு இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டுக்கான தேர்வு இன்று (16ம் தேதி) தொடங்கி நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டதாகும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 20 மொழிகளில் இந்த தேர்வு ஆன்லைன் மூலம் கணினி வழித் தேர்வாக நடத்தப்படுகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் சுங்கான்கடை செயின்ட் சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் 16, 17 மற்றும் 20, 21ம் தேதிகளில்  இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ெகாரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் இந்த தேர்வு மையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் போன்றவை நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: