பிட்காயின் பரிவர்த்தனையில் பணம் இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை சேத்துப்பட்டை சேர்ந்தவர் வேலூர் லாட்ஜில் தங்கியிருந்து

வேலூர், டிச.8: பிட்காயின் பரிவர்த்தனையில் லட்சக்கணக்கில் பணம் இழப்பு ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன்(34), பொறியியல் பட்டதாரி. இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். முரளிகிருஷ்ணன் வேலூர் சேண்பாக்கத்தில் அறை எடுத்து தங்கியிருந்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் செல்போன் கோபுரங்களின் தொழில்நுட்ப பராமரிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தனது வருவாயை பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த முரளிகிருஷ்ணன் வேதனையில் இருந்து வந்தாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அறைக்கு திரும்பியுள்ளார். வழக்கமாக அதிகாலை எழுந்துவிடும் பழக்கமுடைய இவரது அறை திறக்கப்படாமல் இருக்கவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது அறையை திறந்து பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக அவரது மனைவி காயத்ரிக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த மனைவி காயத்ரி மற்றும் உறவினர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிட்காயின் என்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் சில நாட்களாக விரக்தியடைந்த நிலையில் முரளிகிருஷ்ணன் இருந்து வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக முரளிகிருஷ்ணன் மனைவி காயத்ரி அளித்த புகாரின்பேரில், வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: