திருவண்ணாமலையில் பரபரப்பு கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை, டிச.7: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில், கடனுக்காக சொத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, சாதிச்சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1,210 மனுக்கள் பெறப்பட்டது. கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஆர்ஓ உத்தரவிட்டார். இந்நிலையில், திருவண்ணாமலை எறையூர் கிராமத்தை சேர்ந்த மல்லிகா(61), கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு அருகே மனு அளிக்க சென்ற போது, திடீரென பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு கீழே அழைத்து வந்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவர் அளித்த மனுவில், தனது கணவர் செல்வராஜ், மகன் கமல் ஆகியோர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டனர். எனது கணவர் திருவண்ணாமலையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருபவரிடம் சொத்து பத்திரத்தை அடகு வைத்து கடனாக ₹2.50 லட்சம் பெற்றார். இதனை தவணை முறையில் செலுத்தி வந்தேன். கொரோனா காலத்தில் தவணை தொகை செலுத்தமுடியவில்லை.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் எனது வீட்டிற்கு வந்து, நிலம் எங்களுக்கு சொந்தமானது நீங்கள் வெளியே செல்லுங்கள் என கூறினார்கள். நான் கடனை செலுத்திவிடுகிறேன் எனக்கூறியும் எனது சொத்துக்களை அபகரிக்க முயற்சித்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதேபோல், போலீசார் உதவியுடன் சொத்தை அபகரிக்க முயலும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தண்டராம்பட்டு அடுத்த புளியம்பட்டு கிராமத்தை சேர்ந்த சென்னம்மாள் தனது மகள்கள் மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை அடுத்த நார்த்தாம்பூண்டி கிராமத்தில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர். இந்நிலையில், சேத்துப்பட்டு தாலுகா சேர்ந்த குடுமித்தாங்கல் கிராமத்ைத சேர்ந்த மணி என்பவர் தனது குடும்பத்தினருடன் மனு அளிக்க வந்தார். அப்போது, தனது மகன் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த கோரி கலெக்டர் அலுவலகத்தில் அழுது கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். அப்போது, அவர்கள் அளித்த மனுவில், எனது மகன் தட்சிணா(26), ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் சீட்டுபணம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது, சீட்டு பணம் தொடர்பாக பிரச்னை செய்தவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ஆட்டோவை எடுத்து சென்று விட்டனர்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் கடந்த 1ம் தேதி மனு அளிக்கப்போவதாக கூறிவிட்டு வந்த தட்சிணா வீடு திரும்பவில்லை. அன்று இரவு தட்சிணா விஷம் குடித்து விட்டதாகவும், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தட்சிணா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துவிட்டார். எனவே எனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர். வடகிழக்கு பருவமழையால் வீடு பாதிப்பு, விவசாய பயிர்கள் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க கோரி ஏராளமானவர்கள் மனு அளிக்க வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கூட்டம் அலைமோதியது.

Related Stories: