வந்தவாசி அருகே பரபரப்பு ஏரியின் நடுவில் தண்ணீரில் சடலத்தை மூழ்கடித்து மரத்தில் கட்டி வைத்த கும்பல் மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி

வந்தவாசி, டிச.6: வந்தவாசி அருகே மீன் பிடிக்க சென்றபோது, மின் வேலியில் சிக்கி பலியான தொழிலாளி சடலத்தை ஏரியின் நடுவில் தண்ணீரில் மூழ்கடித்து மரத்தில் கட்டி வைத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(40), விறகு வெட்டும் தொழிலாளி. அதே கிராமத்ைத சேர்ந்த இவரது உறவினர் சின்னராஜ்(25). இருவரும் கடந்த 3ம் தேதி இரவு அருகில் உள்ள முளப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் ஏரி பகுதியில் காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் கன்னியப்பன் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சின்னராஜ் அங்கிருந்து சென்று, கன்னியப்பன் மின் வேலியில் சிக்கியது குறித்து உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, உறவினர்கள் சென்று பார்த்தபோது அங்கிருந்த சடலத்தை காணவில்லை.

மேலும் அவரது டவல், மீன் பிடிக்க பயன்படுத்தும் தூண்டில், தலையில் மாட்டும் லைட் உள்ளிட்டவைகள் மட்டும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேசூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். போலீசார் தேடி பார்த்தபோது கன்னியப்பன் காணாததால் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். தொடர்ந்து, டிஎஸ்பி விசுவேஸ்வரய்யா தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், இணைந்து காட்டுப்பகுதியில் கன்னியப்பன் சடலம் உள்ளதா எனவும், ஏரிக்கரையிலும் தேடி பார்த்தனர். மேலும், ஏரியில் சடலம் சிக்கி உள்ளதா? என தொடர்ந்து 6 மணி நேரம் ேதடினர். அதில் ஏரியின் நடுப்பகுதியில் உள்ள வேல மரத்தில் சுமார் 10 அடி ஆழத்தில் கன்னியப்பன் சடலத்தை அவரது லுங்கியால் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை வந்தவாசி தெற்கு காவல் நிலைய காவலர் விஜயன் ஆழத்திற்கு சென்று கண்டுபிடித்தார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலியானதால், போலீசில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மர்ம நபர்கள் திட்டமிட்டு கன்னியப்பன் சடலத்தை ஏரியின் நடுப்பகுதிக்கு கொண்டு சென்று கட்டிவைத்துள்ளதாக தெரிகிறது. இந்த குற்றத்தில் ஈடுப்பட்டவர்களை தேடி வருகிறோம். முதற்கட்டமாக சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் முளப்பட்டு ஏரி பகுதியில் செல்போன் பயன்படுத்திய 10 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்களை பிடித்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்’ என்றனர்.

Related Stories: