பரமக்குடி, காளையார்கோவிலில் நூற்பாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி, டிச.1:   பரமக்குடி அருகேயுள்ள கமுதக்குடியில் மத்திய அரசின் பயோனீர் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 300 பெண்கள் உள்பட 600க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவலின் தடுப்பு நடவடிக்கையாக ஆலை இயங்கவில்லை. இதனால், பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மாத ஊதியத்தை ஆலை நிர்வாகம் பாதியாக குறைத்து வழங்கியது.

பின்பு கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் நூற்பாலை மீண்டும் திறந்து செயல்பட வில்லை. தற்போது பாதியாக வழங்கப்பட்டு வந்த மாத ஊதியத்தையும் முழுமையாக வழங்கவில்லை. நூற்பாலை மீண்டும் செயல்படாததால் தொழிலாளர்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மூடப்பட்டு செயல்படாமல் உள்ள நூற்பாலையை மீண்டும் உடனடியாக திறக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை மாத ஊதியத்தை உடனடியாக ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலையின் நுழைவு வாயில் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர் அம்பேத்கர் தொழிற்சங்க நிர்வாகி வீரசேகரன் தலைமை தாங்கினார். கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ரவி,சண்முகம்,கங்காதரன்,குமரகுரு,வீரசெல்வம், கணேசன், பாலு உள்பட பலர் பேசினர். இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இதுபோல் காளையார்கோவிலில் இயங்கி வரும் தேசிய பஞ்சாலை முன்பு பஞ்சாலை ஊழியர்கள் ஆலையை திறக்க கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Stories: