போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமிக்கும் கால்நடைகள்

ராமேஸ்வரம், டிச.1:  பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் ஆக்கிரமித்து திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாம்பன் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஏராளமான மாடுகள் கூட்டம் கூட்டமாக சாலையை ஆக்கிரமித்து படுத்துக் கொள்கிறது. மழை காலம் என்பதால் தார்ச்சாலையில் கிடைக்கும் கதகதப்பினால் மாடுகள் இரவு நேரங்களில் அதிகளவில் சாலையை ஆக்கிரமிப்பது வழக்கமாகி விட்டது. இதனால் பகல், இரவு நேரங்களில் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையை கடப்பதற்கு சிரமப்படுகின்றனர்.

இரவு நேரத்தில் மின்சார தடை ஏற்பட்டால் நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மேலும், அவசர சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட நபர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சில நேரங்களில் இப்பகுதியை கடந்து செல்வதற்கு காலதாமதம் ஆகிறது. மாடு வளர்ப்பவர்கள் கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் வெளியில் விட்டு விடுவதால் கால்போன போக்கில் திரியும் மாடுகள் சாலையில் திரிவதுடன் மாலை நேரத்தில் சாலையை ஆக்கிரமித்து கொள்கிறது. சாலையை ஆக்கிரமிக்கும் மாடுகளால் வாகன போக்குவரத்தில் ஓட்டுனர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும், ஏற்படும் வாகன விபத்துகளையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: