அதிகாரிகள் துணையோடு தேனியில் புதிய பஸ்நிலையத்தை கூறுபோடும் ஆளுங்கட்சியினர் வாடகையை குறைப்பதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு

தேனி, மார்ச் 24: அதிகாரிகள் துணையோடு தேனி புதிய பஸ்நிலைய வரைபடத்தையே முழுமையாக மாற்றும் வகையில், ஆளுங்கட்சியினர் புதிதாக கடைகளை அமைத்து வருகின்றனர். அதிகாரிகள் வாடகையை குறைப்பதால் நகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தேனி நகருக்கான புதிய பஸ்நிலையம் பைபாஸ் சாலையில் கடந்த 2013ல் திறக்கப்பட்டது. இந்த பஸ்நிலையம் வழியாக வெளி மாவட்டங்களும், வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால், பஸ்நிலையத்தில் 24 மணிநேரமும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். பஸ்நிலையத்தில் வணிக வளாக கடைகள், உணவு விடுதிகள், வாகன காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய பஸ்நிலையத்தின் வரைபடத்தன்மையை மாற்றும் அளவிற்கு, அதிகாரிகள் துணையோடு பெரும் முறைகேட்டில் வருகின்றனர். கடைகளின் அமைப்பை மாற்றி புதிய பாதை அமைத்தல், கடைகளின் நிலையான சுவர்களை இடித்து புதிய சுவர்களை கட்டுதல், இரண்டு கடைகளை ஒரே கடையாக மாற்றுதல், விதியை மீறி புதிய உணவுக்கூடங்களை அமைக்க சிறிய கடைகளை இடித்து உணவுக்கூடங்களை அமைத்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அதிகாரிகளை வணிகர்கள் நன்றாக கவனிப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடக்காத நிலையில், அதிகாரிகள் வணிக கடைகளுக்கான வாடகையை பெருமளவு குறைத்துள்ளனர். இதன்மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு பெரும் தொகை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்களுக்காக பங்கை பெற்று நகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொள்ளாமல், பயணிகள் நடமாடும் பகுதி, பஸ்கள் வந்து செல்லவேண்டிய ஓடுதளப்பகுதிகளை தரை வாடகை பெயரில் ஆளுங்கட்சியினருக்கு குறைந்த வாடகைக்கு விட்டுள்ளனர். இதனால், மிகப்பலம் பொருந்திய பஸ்நிலைய கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கி தங்கள் வசதிக்கேற்ப மாற்றி வருகின்றனர். ஆளும்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டதால் நகராட்சிக்கு ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல்:

சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், புதிய பஸ்நிலையத்தில் திண்டுக்கல் பஸ்கள் வந்து செல்லும் ஓடுதளத்தில், பலம் பொருந்திய கான்கிரீட் ஓடுதளங்கள் தகர்க்கப்பட்டும், மிக பலமான காம்பவுண்ட் சுவர்கள் டிரில்லர் மூலம் இடிக்கப்பட்டும் கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. இதன் காரணமாக பயணிகள் நடந்து செல்ல அவதிப்படுகின்றனர். இப்பஸ்நிலையம் உருவாக்கும் போதே பஸ்நிலையம் வரும் பயணிகள் இளைப்பாற வசதியாக பஸ்நிலைய வளாகத்தில் இரண்டு பூங்காக்களை அமைத்தனர். இப்பூங்காவிற்குவரும் பயணிகள் தங்கள் வாகனங்களை பூங்காவை சுற்றி நிறுத்திவிட்டு குழந்தைகளுடன் பொழுதை கழித்தனர். தற்போது, இந்த பூங்காவை சுற்றி வாகனங்கள் ஏதும் வரமுடியாத அளவிற்கு சட்டப்புறம்பாக அதிகாரிகள் பஸ்ஸ்டாண்டின் பூங்காவிற்கு வரும் மூன்று பாதைகளையும் இரும்பு கேட் கொண்டு மூடியுள்ளதால் இப்பகுதியே வெறிச்சோடிப்போயுள்ளது. எனவே, ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகாரிகள் செய்த முறைகேடுகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>