திமுக ஆட்சியில் பழநி தனி மாவட்டம் உருவாக்கப்படும் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேட்டி

பழநி, மார்ச் 24: திமுக ஆட்சியில் பழநியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தெரிவித்தார். பழநி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:திமுக ஆட்சியில் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான பழநியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும். பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் கோயில் நகரான பழநி மற்றும் சுற்றுலா நகரமான கொடைக்கானல் போன்றவை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தளமாக மாறும்.ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கள் கிடைக்கும். பழநி நகராட்சி மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்தை திருப்பதி போல் ஒன்றிணைத்து பக்தர்களுக்கான வசதிகள் அதிகப்படுத்தப்படும். பழநி நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றித் தரப்படும். கலை, பண்பாடு மற்றும் கலாச்சார பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். புதுதாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வரதமாநதி அணைக்கு மேலே தடுப்பணை அமைக்கப்படும்.

அதிமுக அரசால் முடக்கப்பட்ட பழநி-ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்தில் தமிழக அரசின் பங்குத்தொகையை மத்திய அரசிடம் வழங்கி திட்டம் உயிர்ப்பிக்கப்படும். பச்சையாறு அணைத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இத்திட்டங்களை எடுத்துக்கூறி மக்களிடம் திமுகவிற்கு வாக்கு சேகரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: