தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரேநாளில் கொள்ளையன், டிரைவர் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி, ஏப். 23: தூத்துக்குடி மாவட்டத்தில் பிரபல கொள்ளையன், அரிசி கடத்திய லோடு ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 5 பேரை  ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம்  விளவங்கோடு அருகே திக்குறிச்சியைச் சேர்ந்த லூக்காஸ் மகன்  ரிஜோய் (31). லோடு ஆட்டோ டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி  புறநகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்த முயன்றதால் கைதானார். இவர்  மீது ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் உணவு  கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி பிரபாகரன், டிஎஸ்பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர்  தில்லைநாகராஜன் ஆகியோர் குண்டாசில் கைதுசெய்ய பரிந்துரைத்தனர். அதன்பேரில் கலெக்டர் செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவை அடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில்  ரிஜோயை  போலீசார் கைதுசெய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலை சிந்தலக்கட்டை முருகையா நகரை சேர்ந்தவர் சேகர் (எ) கொம்பன் (55). சொத்து தகராறில் கடந்த மார்ச் 22ம் தேதி தனது சகோதரர் சின்னதுரையின் மனைவி ராமலட்சுமி (40) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஓட்டப்பிடாரம் போலீசார், சேகர் (எ) கொம்பனை கைது செய்தனர்.

 தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியதாக ஆரோக்கியபுரம் பாலதண்டாயுத நகரை அஜய் (எ) மாடசாமி (40), லட்சுமணன் மகன் சண்முக விக்னேஷ் (எ) விக்னேஷ் (23) ஆகிய இருவரையும் வடபாகம் போலீசாரால் கைது செய்தனர். இதனிடையே பிரபல கொள்ளையனான வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சாந்தகுமார் மகன் அப்பு (எ) அப்பன்ராஜ் (31) என்பவரை பல்வேறு கொள்ளை, திருட்டு சம்பவங்கள் தொடர்பாக  தாளமுத்து நகர் போலீசார்  கைது செய்தனர். இவர் மீது சென்னை, தூத்துக்குடி காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 47க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட  சேகர் (எ) கொம்பன், அஜய் (எ) மாடசாமி, சண்முக விக்னேஷ் (எ) விக்னேஷ், அப்பு (எ) அப்பன்ராஜ் ஆகிய 4பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரைத்தார். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, அருள் ஆகியோர் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். அதன்பேரில் 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: