போளூரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 15 பேர் மீது வழக்கு

போளூர், ஏப்.10: போளூரில் அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.போளூர் தாலுகா ராந்தம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(41), இவர் போளூர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு 11.45 மணிக்கு சென்னையில் இருந்து போளூருக்கு பஸ் ஒட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது போளூர் பைபாஸ் சாலை, நற்குன்று முருகன் கோயில் அருகே பஸ் நின்றது. அப்போது, அங்கு சென்னை செல்வதற்காக நின்று கொண்டிருந்த 15 பேர் பஸ்சில் ஏறி இடம் பிடித்தனர்.

இதைப்பார்த்த டிரைவர் குமார் பஸ் நிலையத்திற்கு சென்று விட்டு மீண்டும் பணி மனைக்கு சென்று அதன் பிறகே மீண்டும் பஸ் நிலையம் வருவதாகவும், அதனால் யாரும் பஸ்சில் ஏற வேண்டாம் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட போளூர் பொன்னுசாமி தெருவை சேர்ந்த போஸ்(27) என்பவர், பஸ்சின் கண்ணாடியின் மீது கற்களால் தாக்கியுள்ளார். இதனை டிரைவர் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போஸ் டிரைவர் குமாரை அவதுறாக பேசி, கைகளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். அப்போது போஸூக்கு ஆதராக அவருடன் இருந்த 15 பேரும் குமாரை மிரட்டியுள்ளனர். அதில் குமார் படுகாயமடைந்தார்.இதையடுத்து நடத்துனர் சாம்ராஜ், டிரைவர் குமாரை மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.இதுகுறித்து டிரைவர் குமார் போளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், 15 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: