கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியது வேகமாக பரவுவதால் பொதுமக்கள் அச்சம் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஏப்.9: திருவண்ணாமலை மாவட்டத்தில், மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்தது. ஆனால், விழிப்புணர்வு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாததால், கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு பாதிப்பு என்றிருந்த நிலை மாறிவிட்டது. தற்போது, சராசரியாக நாளொன்றுக்கு 40 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த 6ம் தேதி 44 பேருக்கும், நேற்று முன்தினம் 38 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், தொற்றுக்கான அறிகுறி காணப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, தினசரி 700 முதல் ஆயிரம் வரை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை தாலுகா அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 4 நபர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

எனவே, தாலுகா அலுவலகத்தில் நேற்று ஊழியர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல், நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால், தனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் முகக்கசவம் அணியாதவர்களுக்கு தலா ₹200 அபராதம் விதிக்கப்பட்டது. அதையொட்டி, நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் நேற்று நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 68 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: