சட்டமன்ற தேர்தலில் இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம்

ஈரோடு, ஏப். 4: ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கதிரவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 6ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்கும் நேரம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும், கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக கண்டிப்பாக முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதிக்கும் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டு கிருமிநாசினி வழங்கப்படும். மேலும் வாக்காளர்களுக்கு ஒரு கையுறை மட்டும் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்பட்ட கையுறையை அணிந்து வாக்குப்பதிவு செய்தபின், பயன்படுத்தப்பட்ட கையுறையை வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு இருக்கும் குப்பை தொட்டியில் போட்டு விட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற வேண்டும்.   எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: