சட்டமன்ற தேர்தல் 2021 நடைபெறுவதை முன்னிட்டு பட்டுச் சேலையில் தேர்தல் விழிப்புணர்வு

காஞ்சிபுரம், மார்ச் 23: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 நடைபெறுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு  நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் என்றாலே நினைவிற்கு வருவது காஞ்சிபுரம் பட்டு, காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர்களால் காஞ்சிபுரம் தூய பட்டினால் கையால் நெசவு செய்யப்பட்ட ‘நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு’ என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வால் ஹேங்கிங் பட்டுத்துணி உமாபதி என்ற நெசவாளரால் வடிவமைக்கப்பட்டு, கோவிந்தராஜ் என்ற நெசவாளரால் நெய்யப்பட்டது. இந்த பட்டுத்துணி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிமுகப்படுத்தி, பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநர் கணேசன், நெசவாளர் கோவிந்தராஜ், வடிவமைப்பாளர் உமாபதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: