திருப்போரூர் - திருக்கழுக்குன்றம், மானாம்பதி - செங்கல்பட்டு இடையே கொரோனா ஊரடங்கு முடிந்தும் இயக்கப்படாத அரசு பஸ்கள்

திருப்போரூர், மார்ச் 18: செங்கல்பட்டு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து செங்கல்பட்டு - மானாம்பதி இடையே திருநிலை, ஒரகடம், அருங்குன்றம் வழியாக (தஎ டி11) எச்சூர், புலியூர், திருக்கழுக்குன்றம் வழியாக (தஎ டி.21) ஆகிய 2  நகர பஸ்கள் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டன.

அதேபோன்று கல்பாக்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து திருப்போரூர் -திருக்கழுக்குன்றம் இடையே (தஎ108 எம்), பஸ் 3 நடைகள் இயக்கப்பட்டது. திருக்கழுக்குன்றத்தில் இருந்து மானாம்பதி, திருப்போரூர் வழியாக சென்னை கோயம்பேடுக்கு (தஎ 119பி) இயக்கப்பட்டது. இந்த பஸ் இரவில் முள்ளிப்பாக்கத்தில் தங்கி, சென்னைக்கு அதிகாலையில் முதல் நடையாக இயக்கப்பட்டது. மேலும் திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் இடையே (தஎ 19டி) பஸ் 6 நடைகள் இயக்கப்பட்டது. இந்த பஸ்கள், கிராமப்புற மக்கள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், கீரைகளை செங்கல்பட்டு, தாம்பரம், கோயம்பேடு வரை கொண்டு செல்வதற்கு மிகவும் பயன்பட்டன. மேலும் சிறு வியாபாரிகள், பால், தயிர் விற்பனையாளர்கள், சென்னை போன்ற புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.

இந்த பஸ்கள் அனைத்தும் கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும் செங்கல்பட்டு பணிமனையில் இருந்து இயக்கப்படும் (டி21, டி11) 2 பஸ்கள் இயக்கப்படவே இல்லை. அதேபோன்று கல்பாக்கம் பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட (119பி மற்றும் 19டி) பஸ்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளில் இருந்து 2 தனியார் பஸ்கள் மட்டும் மானாம்பதி வழியாக திருப்போரூர் வரை இயக்கப்படுகிறது. லாப நோக்கமின்றி கிராமப்புற மக்களுக்காக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தற்போது நிறுத்தப்பட்டதால் இதுபோன்ற சிறு விவசாயிகள், நெசவாளர்கள், கூலித்தொழிலாளர் கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே, கிராமப்புற மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட பஸ் சேவையை செங்கல்பட்டு மற்றும் கல்பாக்கம் பணிமனை நிர்வாகங்கள் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: